நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதவன், ராஜேஸ்வரி தம்பதி. மனைவி ராஜேஸ்வரி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு பாரதிராஜா (5) என்ற மகன் உள்ளான். நேற்று மாலை மாதவன், கர்ப்பிணி மனைவி ராஜேஸ்வரி, மகன் பாரதி ராஜா ஆகிய மூவரும் மூக்கூடலிலிருந்து குமாரசாமிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நெல்லையை நோக்கி எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு மாதவன், அவரது மகன் பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து, கர்ப்பிணி மனைவி ராஜேஸ்வரி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கர்ப்பிணி ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து முக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!