திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகளிலிருந்து ஜன. 12ஆம் தேதி முதல் சராசரியாக 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. குறிப்பாக ஜன.13ஆம் தேதி நள்ளிரவு 62 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடுவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், நெல்லை அணைகளில் நான்கு நாள்களுக்குப் பிறகு தண்ணீர் திறப்பு பத்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று (ஜன.16) காலை நிலவரப்படி பாபநாசம், மணிமுத்தாறு, கடனா அணைகளிலிருந்து மொத்தம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்துள்ளதால் அணைகளில் தண்ணீர் திறப்பு குறைந்தது. இதற்கிடையில் நெல்லை அருகேவுள்ள திடியூரில் பச்சை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தொடர் மழை காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த சில நாள்களாக அணையின் பக்கவாட்டு சுவற்றில் தண்ணீர் கசிந்து வருகிறது. வெளியில் தெரியாமல் இருப்பதற்கு அலுவலர்கள் மணல் மூட்டைகளை கொண்டு கசிவை சரி செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தடுப்பணை முழுவதும் சேதம் அடையாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் - பூஞ்சோலை கிராம மக்கள் அவதி!