திருநெல்வேலியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மிகப் பலமாக உள்ளது. நேரு குடும்பம் மீது மக்கள் அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.
குறிப்பாக, ராகுல் காந்தி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. கோவை வந்த பிரதமர் மோடி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் எல்லை தாண்டி எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார். பாஜகவில் சொல்லிக்கொள்ளும் அளவிலும், விளம்பரப்படுத்தும் அளவிலும் தலைவர்கள் இல்லாததால் எம்ஜிஆர் , புகழ்பெற்ற தலைவர் காமராஜர் படத்தை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். காமராஜருக்கும் பாஜகவுக்கு என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒருபோதும் பேசியதும் இல்லை. கருத்து தெரிவித்ததும் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் உம்மன்சாண்டி தலைமையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேச்சு வார்த்தையின் முதல் கட்டத்திலேயே தொகுதிகள் இறுதி வடிவம் பெறும் என உறுதி செய்ய முடியாது.
கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் கற்பனையே. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாகப் போட்டியிடும். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைந்ததற்கு திமுக காரணமல்ல.
புதுச்சேரியில் பிரதமர் மோடியால்தான் ஆட்சி கவிழ்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்குப் பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி, தனிநபர்கள் வங்கிக் கணக்கை கண்காணிக்க தனிப்படை- சத்யபிரத சாகு