திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பெருமழை வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது. இந்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நிவாரணப் பொருட்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளதாகவும், நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க இருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து புயல், வெள்ளம், மழை பாதிப்புகள் குறித்து மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கூறி இருக்கிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தோம். அதன் அடிப்படையில், நிவாரணத் தொகையாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மத்திய அரசு வழக்கம்போல ரூ.900 கோடியை இரண்டு தவணைகளாக மட்டும் வழங்கி உள்ளது. தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இந்த பாதிப்புகளைப் பார்த்த பின் அவர் மனம் இறங்க வேண்டும்.
அவருக்கு கருணை மேலோங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற பேரிடர் காலங்களில் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்கு முன்பே தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்று மாநிலத்தில் ஆளும்கட்சி எதுவோ, அதை விமர்சனம் செய்வது என்பது அற்ப அரசியலாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
அப்படி அற்ப அரசியலாகப் பார்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெருமழை வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று நிர்மலா சீதாராமனின் பதில் பொறுப்பற்றது. பிரதமரிடம் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது ஏற்புடையது அல்ல.
பிரதமரின் ஒப்புதலோடுதான் பேசுகிறாரா அல்லது நிர்மலா சீதாராமன் தான்தோன்றித்தனமாகப் பேசுகிறாரா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவாக இதைப் பேசுகிறாரா? நிர்மலா சீதாராமனின் இந்த பொறுப்பற்ற பதில், ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிறது.
பெருமழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பழைய வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிற 29ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வெளிநாட்டுல இருக்காரு’.. ரூ.20 லட்சத்தை பறிகொடுத்த நபரின் பரபரப்பு புகார்!