திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் 'தமிழகத்தை சீரமைப்போம்' என்ற முழக்கத்தோடு தென்மாவட்டங்களில் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்ற அவர், பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கப்பதற்கு பாடுபட்டு வருகிறோம். பிறரிடம் இல்லாத ஆயுதமான நேர்மை எங்களிடம் உள்ளது. ரஜினிகாந்த் குறித்துப் பேசுவதால் நான் ஆன்மீக அரசியலை நோக்கி பயணிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.
எம்.ஜி.ஆரின் நீட்சி என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. சிறுவயதிலிருந்தே எனக்கும், அவருக்கும் அதிக நெருக்கம் உண்டு. எம்.ஜி.ஆர் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவர். எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவினை அறிவிப்பேன்.
நான் போட்டியிட வேண்டும் எனக் கோரி பல்வேறு பகுதியிலிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நிச்சயம் மூன்றாம் அணி அமையும். நல்லவர்களுடன் நாங்கள் கூட்டணி வைப்போம். திமுக உடன் கூட்டணி அமைப்பதற்கான தருணம் இப்போது இல்லை. பண பலம் அதிகார பலம் எங்களிடம் உள்ளது. ஆனால் அதைக் கொண்டு நாங்கள் மோத மாட்டோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்'- கமல் ஹாசன்