தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்து செல்லக்கூடிய பிரதானமான இடமும் போக்குவரத்திற்கு ஏதுவான இடமாக இருப்பது பாளையங்கோட்டை பேருந்து நிலையமும், வ.உசி மைதானமும் ஆகும்.
அதிகமான மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்கு வ.உ.சி மைதானத்திலும், பேருந்து நிலையத்திலும் இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதை சிலர் தங்களது செல்ஃபோனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையறிந்த கல்வித்துறை அலுவலர்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்துனர். இதைத் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட 49 மாணவர்களையும், காவல் துறையினர் அடையாளம் கண்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். முன்னதாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அப்போது மாணவர்களுக்கு தண்டனையாக 1330 திருக்குறளையும் எழுத உத்தரவிட்டனர். இதனையடுத்து மாணவர்கள் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்த படி 1330 குறளையும் எழுதினர்.
பின்னர் மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய காவல் துறையினர், அவர்களுடன் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது அறிந்த சமூக ஆர்வலர்கள் காவல் துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 2 மாணவர்களுக்கு ஜாமின்!