நெல்லை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (மார்ச்1 ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், “ விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தபோது, அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அஇஅதிமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தன்னை ஒரு விவசாயி எனக் கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளின் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்துவாரா ? அவரால் முடியுமா ?
பாஜக மேலிடத்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாயில் திண்டுக்கல் பூட்டு போடப்பட்டுள்ளது. அவரால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேச முடியாது. மத்திய பாஜக அரசு எதை செய்தாலும் அதனை ஏற்கும் நிலையில் தான் அவரது சூழ்நிலை இருக்கிறது. மத்திய பாஜக அரசின் அடிமை அரசாக மட்டுமே அதிமுக அரசால் விளங்க முடியும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்ததில், வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதில் பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இரட்டை இன்ஜின் போல் செயல்பட்டுள்ளன. மக்களை பிளவுப்படுத்தும் பாஜகவையும், தமிழ்நாட்டு உரிமைகளை தாரைவார்த்த அதிமுக அரசையும் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு அகற்ற வேண்டும். மக்கள் இயக்கம் போல கட்டுக்கோப்புடன் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : பெட்ரோல் விலை உயர்வை நாசுக்காக கலாய்ந்த ராகுல்... மக்களிடையே எழுந்த சிரிப்பலை...!