திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" என்ற புத்தகம் நீக்கப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த துணைவேந்தர் பிச்சுமணி, "மூன்றாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே, அருந்ததி ராய் எழுதிய புத்தகத்திற்கு மறைமுகமாக எதிர்ப்பு வந்தது. தற்போது ஏபிவிபி அமைப்பினர் புகார் கொடுத்ததால் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அரசு சாராத ஒரு மாணவர் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில், "அருந்ததி ராய் எழுதிய 'வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்' என்ற புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. பாடத்திட்டத்தை பொறுத்தவரை பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுதான் முடிவு செய்வார்கள். இந்தக் குழு எடுக்கிற நிலைப்பாட்டுக்கு போர்டு ஆஃப் ஸ்டடிஸ் என்று சொல்லப்படும் ஸ்டாண்டிங் கமிட்டி அனுமதி வழங்கும்.
அதன்பிறகு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு பாடத்திட்டத்தை அங்கீகரிக்கும். இப்படிதான் கடந்த 3 ஆண்டுகளாக அருந்ததி ராய் எழுதிய கட்டுரை பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. திடீரென ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், இது ஒரு தேச விரோத கட்டுரை உடனே பாடத்திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென ஒரு கடிதம் எழுதினார்கள். துணைவேந்தர் அந்த கடிதத்தை போர்டு ஆப் ஸ்டடிஸ்சின் பரிந்துரைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல் துணைவேந்தரே தன்னிச்சையாக ஒரு குழு அமைத்து கட்டுரையை நீக்க முடிவெடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்த புத்தகம் தேசவிரோத புத்தகம் என்றால் அரசு அதை தடை செய்திருக்க வேண்டும். இது தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல, எந்த வல்லுநர்களிடமும் ஆலோசனை செய்யாமல் அந்த புத்தகத்தை நீக்கிவிட்டேன் என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாது. வரம்பு மீறிய செயலை மூட்டா வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, நீீக்கப்பட்ட இந்தக் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
யாரை திருப்திப்படுத்த இப்படி புத்தகத்தை நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. கட்டுரையை நீக்குவது தொடர்பாக துணைவேந்தர் நடத்திய கூட்டத்தின்போது, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவும் நடந்துள்ளது. ஆனால், அந்தக் குழுவிடம் கட்டுரை நீக்குவது குறித்து எந்த ஒரு தகவலும் துணைவேந்தர் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் எதிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூ விலை உயர்வு!