திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) உந்தும வளாகம் உள்ளது. இங்கு விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இங்கு ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புதவற்காக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (டிசம்பர் 23) கிரையோஜெனிக் சி.இ.20.இ.9 என்ஜின் 650 வினாடிகள் சோதனை செய்யப்பட்டது.
இது 22.2 டன் எடையை தூக்கி செல்லும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும்போது கூடுதலாக 500 கிலோ எடையை அதிகரிக்கும் வகையில் பரிசோதிக்கப்பட்டது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனை காணொலியில் பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சோமநாத், இதற்காக விஞ்ஞானிகளை பாராட்டினார். உந்தும வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி, இணை இயக்குனர் ஆசீர் பாக்யராஜ், துணை இயக்குனர் நாராயணன் அப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பழமைவாய்ந்த சவேரியார் கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி; பேராசிரியர்கள் குற்றச்சாட்டு