திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியதை தொடர்ந்து, தற்காலிகமாக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கப்பட்டது.நிரந்தர செவிலியர்கள் போலவே இவர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் பணி ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தல் முறையும் கடைபிடிக்கப்பட்டது
இந்நிலையில், நவம்பர் முதல் தற்காலிக செலிலியர்களை பணிக்கு வர வேண்டாம் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முறையிட்டு கோரிக்கை மனுவை வழங்கினர்.
அந்த மனுவில், "கரோனா காலத்தில் பிபி உடையணிந்து மிக கடுமையான சூழலில் பணி புரிந்தோம். அச்சமயத்தில், உரிய ஊதியம் கொடுக்கவில்லை. இருப்பினும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிபுரிந்து வந்தோம் தற்போது திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர் இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளோம். எனவே மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்