தேனி: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக, கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் பேரில், காவல் ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் கம்பம் குமுளி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, உரக்கிடங்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக 5 பேர் சாக்கு மூட்டைகளுடன் இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனால், காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த சாக்கு பையை சோதனை செய்துள்ளனர். இதில், 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் துளசி (வயது 43). இவர் ஆந்திராவில் உள்ள நாகராஜு என்பவரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கம்பத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஓபிஜி குழுமத்தில் கட்டுகட்டாக பணம்; அமலாக்கத்துறை சோதனையில் பிடிபட்டது எப்படி?
தொடர்ந்து, நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆதித்யன் (24), கம்பம் சின்னபள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்த முஜாஹித்அலி (24), பார்ரோடு தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (24), ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்த ஆசிக் அகமது (24) ஆகியோருடன் சேர்ந்து கேரளாவிற்கு இருசக்கர வாகந்த்தின் மூலமாக கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கஞ்சாவை கடத்திச் சென்ற துளசி, ஆதித்யன், முஜாஹித்அலி, ஹரிஹரன் மற்றும் ஆசிக் அகமது ஆகிய 5 பேர் மீது கம்பம் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், இதில் தலைமறைவாக உள்ள ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜுவை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்