சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், 28 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனையடுத்து, மீதமுள்ள 27 பேரிடம் செம்பியம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டது என முதலில் கூறப்பட்டாலும், பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணை படி காவல்துறையினரின் குற்றப்பத்திரிகையில், A1 ஆக ரவுடி நாகேந்திரனும், A2 ஆக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கடந்த விசாரணையில் காவல்துறையினரால் தயார் செய்யப்பட்ட 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை, பென்டிரைவ் மூலமாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வழங்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
இதையும் படிஙக: ஓபிஜி குழுமத்தில் கட்டுகட்டாக பணம்; அமலாக்கத்துறை சோதனையில் பிடிபட்டது எப்படி?
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் நவம்பர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று (நவ.14) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது, 27 பேருக்கும் 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 27 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்