ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையக வளாகத்தில் 16.06 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய உள் விளையாட்டரங்கம் மற்றும் வெளி விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: "இது என் கட்சி நீ வெளியே போ" சீமான் கூட்டத்தில் தள்ளு முள்ளு? நிர்வாகிகள் பகிரங்க குற்றச்சாட்டு!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி கூறுகையில், “பொங்களுக்கான இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணியை வேகப்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டெண்டர் விடுவதில் தாமதமானதால் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முன் வேட்டி, சேலைகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகளை தினசரி கண்காணித்து வருகிறோம். திட்டமிட்டபடி இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்குள், ஜனவரி 15ஆம் தேதிக்குள் வழங்கப்படும்,” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்