திருநெல்வேலி: மின் கட்டண உயர்வை கண்டித்து திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு, நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக வழக்கறிஞரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பழைய சினிமாக்களில் போலீஸ் என்றாலே, எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் வருவார்கள்.
ஆனால் தமிழ்நாடு காவல்துறை மிக மோசமாக உள்ளது. அதிமுக தலைமைக்கழகம் சூறையாடப்பட்ட விவகாரத்திலும், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்திலும் போலீசார் அங்கேயே இருந்தும் எதையும் தடுக்கவில்லை. சீரழிவுகள், தாக்குதல்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு வருகிறார்கள். எனவே தமிழ் சினிமாவில் வரும் போலீசாரை விட, தமிழ்நாடு போலீசார் மிகக் கேவலமாக உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஓபிஎஸ் அதிமுக வங்கி கணக்கை முடக்க வேண்டும் என கடிதம் கொடுக்கவில்லை. அதில், ஆல் இந்தியா திராவிட முன்னேற்றக் கழகம் எனக் குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கு கூட இந்தியன் வங்கி என போடாமல், ‘இந்தியா வங்கி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் தவறு உள்ளது. எனவே இதுகுறித்து பிற விஷயங்களை எங்கள் தலைவர்கள் முடிவெடுத்து உரிய முறையில் பதில் அளிப்பார்கள். பொதுவாக அரசியல் கட்சிக்கு சட்டப்பேரவை, பாராளுமன்ற, பொதுக்குழு செயற்குழு இந்த மூன்று தான் முக்கியம். இதில் யார் மெஜாரிட்டியாக இருக்கிறார்களோ, அவர்களிடம் தான் கட்சி இருக்கும்.
சட்டப்பேரவையில் 63 சட்ட்டப்பேரவை உறுப்பினர்கள் எடப்பாடியிடம் உள்ளனர். எனவே சட்டப்படி பார்த்தால், சபாநாயகருக்கு சட்டம் தெரியுமா தெரியாது என தெரியவில்லை. அவர் அலுவலர்களிடம் கேட்டு உரிய முடிவெடுப்பார்” என விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க: ‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்!