திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் 'தமிழகத்தை சீரமைப்போம்' என்ற முழக்கத்தோடு தென் மாவட்டங்களில் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்ற அவர், பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, " இளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் நாளை அவர்களை தாக்கும் அதற்கு முன் நீங்கள் அரசியலை தாக்க வேண்டும். எம்.ஜி.ஆர் இரண்டு இலைகளை நட்டு வைத்தார். அதை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் விருந்தில் ருசிக்கின்றனர்.
எம்ஜிஆர் மக்கள் சொத்து. தற்போது இரண்டு அரசியல் தான் உள்ளது. ஒன்று பழிவாங்கும் அரசியல், மற்றொன்று பழிபோடும் அரசியல். ஆனால் நாங்கள் வழி தேடும் அரசியல் முடிந்தால் வழிகாட்டும் அரசியலை செய்வோம். எங்கள் கொள்கை வியூகம் அனைத்தும் நேர்மை மட்டும் தான்.
நான் செல்லும் இடங்கள் எல்லாம் ரஜினிகாந்துடன் இணைவீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கான தருணம் இது அல்ல. மக்களின் ஆசி எங்கள் பக்கம் வரத் தொடங்கிவிட்டது. நாங்கள் தான் ஏ டீம் நாங்கள் யாருக்கும் பி டீம் அல்ல. ஊழலில் உலகளவில் முதலிடத்தை நோக்கி இந்தியா நகர்ந்து விட்டது.
அதில் தமிழ்நாடு உச்சத்தில் உள்ளது. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர். அதனால் எப்போதும் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு. தமிழன் எம்மொழியையும் கற்றுக் கொள்ள தயாராக உள்ளான். ஆனால் திணித்தால் காறித் துப்பிவிடுவான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத வெளிப்படையான டெண்டர் ஒப்பந்தம் போடப்படும், அரசுப் பணி நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.
மக்களை நோக்கி அரசு திட்டங்கள் கொண்டுச் செல்லப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாம் அணி அமையும்' - கமல்ஹாசன்!