திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவை உறுதிமொழி குழு: முதல் கட்டமாக நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி),நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பாளையங்கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் குழு தலைவர் வேல்முருகன், அங்கு நடைபெற்று வரும் பணி நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
பாளையங்கால்வாயை சுத்தப்படுத்த கோரிக்கை: அப்போது அங்கு வந்த தாமிரபரணி பாதுகாப்பு குழுவை சேர்ந்த சிராஜ் என்ற இளைஞர், பாளையங்கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக “வீடுகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக, பாளையங்கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதை நீங்களே பாருங்கள், எந்தளவுக்கு கழிவுநீர் கலக்கிறது என்று, இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என தெரிவித்தார். அதற்கு பதில் கூறிய குழு தலைவர் வேல்முருகன், “இந்த குழுவின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை இங்கே வரவழைத்து ஆய்வு செய்து வருகிறேன். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆட்சியரிடம் கூறி எந்த வேலையும் நடைபெறுவதில்லை: அதற்கு இளைஞர் சிராஜ், ஆட்சியரிடம் கூறி எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்று அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், பாளையங்கால்வாயை சீரமைக்க தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனையடுத்து முதல் கட்டமாக கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி, அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக குழு தலைவர் வேல்முருகன் உறுதி அளித்தார்.
டென்சனான ஆட்சியர்: அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசத் தொடங்கினார். அப்போது இளைஞர் சிராஜ் குறுக்கிட்டதால், கோபமடைந்த ஆட்சியர், “ஹலோ கொஞ்சம் பொறுங்கள். இதுவரைக்கும் நீங்கள் பேசினீர்கள். நாங்கள் அமைதியாக கேட்டோம் அல்லவா. நான் பதில் கூறுகிறேன். கொஞ்சம் நேரம் அமைதியாக கேளுங்கள்” என்று கூறி ஆட்சியர் தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசுகையில், “பாளையங்கால்வாயை சீரமைக்கும் திட்டத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.
கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாற்றுத்திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் பாளையங்கால்வாயில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் கார்த்திகேயன் கூறினார். ஆட்சியர் பேசும் போது இடையிடையில் இளைஞர் சிராஜ் குறுக்கிட்டதால், மேலும் கோபமடைந்த ஆட்சியர், எதற்கு இப்படி அவசரப்படுகிறீர்கள்?, கொஞ்சம் அமைதியாக சொல்வதை கேளுங்கள் என்று டென்ஷனோடு பதில் அளித்தார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் உட்பட அனைவரும் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றனர். இக்குழுவினர் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இருக்கும் போதே, சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குறை கூறிய இளைஞரால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: கமகம மட்டண் பிரியாணி.. நெல்லையில் தடபுடலாக நடந்த அதிமுகவினரின் கறி விருந்து!