கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் 53வது புதிய காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம் ஐபிஎஸ் (IPS) நேற்று (அக்.19) பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கண்காணிப்பாளராக இருந்த ஹரி கிரண் பிரசாத், புதிய காவல் கண்காணிப்பாளரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார். புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுந்தரவதனத்திற்கு காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், டிஎஸ்பிக்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பேசுகையில், “பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச் செயல்களை தடுப்பதும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதும் எனது முதல் பணியாகும்.
மேலும் சுற்றுலாப் பகுதிகள் அதிகம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது, பான் பராக், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து, போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவேன். பொதுமக்கள் குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரிலும், செல்போன் எண்ணிலும், வாட்ஸ் அப் மூலமாகவும் தயக்கமின்றி தெரிவிக்கலாம்" என அவரது செல்போன் நம்பரையும் தெரிவித்தார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரவதனம் ஐபிஎஸ், அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E படிப்பை முடித்துவிட்டு, மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேலாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வாகி IPS அதிகாரியானார். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சியை முடித்து, மாமல்லபுரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, அதன் பின் சென்னை மாநகரத்தில் மாதவரம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் துணை ஆணையராக பணிபுரிந்து உள்ளார். அதன் பின், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த இவர், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.