திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பொறுப்பேற்று சில மாதங்களே ஆகிய நிலையில் மாவட்ட காவல் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். குறிப்பாக காவல் துறையினரின் சேவையை மேம்படுத்துவது, அதேசமயம் காவலர்கள் நலனை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தின் முதல்நிலை காவலரான லட்சுமி நாராயணன், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்ததையடுத்து சமீபத்தில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அப்பகுதியில் நடைபெறும் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருப்பது குறித்த தகவல் காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அவர் பரிந்துரையின் பேரில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் நேற்று (செப்.17) அதிரடியாக உத்தரவிட்டார். ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பதவியில் உள்ளவர்கள் மீது டிஐஜியால் மட்டுமே துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியும், அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் தற்போது உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை டிஐஜி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிகளவில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் கூட காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். குறிப்பாக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம், மணல் கடத்தல் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் உயர் அலுவலர்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் மணல் கடத்தல் கும்பலிடமிருந்து மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில்தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உளவுத்துறை மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினரின் நடவடிக்கையை கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் கார்த்திகேயன் மணல் கடத்தலுக்கு உதவியாக இருப்பது உளவுத்துறை மூலம் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்நிலை காவலரை தொடர்ந்து தற்போது உதவி ஆய்வாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இதுபோன்று குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் சக காவலர்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!