நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் இரண்டு அலகுகளில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கூடங்குளம் மூன்று மற்றும் நான்காம் அலகு அணு உலையில் கட்டுமானப் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கு பணிபுரிந்து வந்த ரஷ்ய விஞ்ஞானிகளின் தலைவரான கிளினின் கோ வடின் (வயது 55 ) மாரடைப்பு காரணமாக, பாதிக்கப்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிளினின் கோ வடின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடல் தூதரகம் மூலம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அணு உலையில் பணிபுரிந்த வெளிநாட்டு விஞ்ஞானி உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் சம்பவம் - 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு!