நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (45). அவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நின்றுகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தாழையூத்து காவல் துறையினர் பாபுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, நெல்லை தாலுகா காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ச்சனா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட பாபு அதே பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடித்து வந்ததாகவும், இதனால் சிலருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் சாதி ரீதியான பிரச்னையில் பாபு கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : +2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு