நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி பத்மாவதி தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று பத்மாவதி மற்றும் சிவா இருவரும் வழக்கம்போல் காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.
மாலை பத்மாவதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
![கொள்ளையடிக்கப்பட்ட வீடுa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-01-nellaihousetheft-scrpt-7205101_08042021095951_0804f_1617856191_1017.jpg)
இதையடுத்து பத்மாவதி அளித்த புகாரின் பேரில் திசையன்விளை காவல் நிலைய காவலர்கள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டை உடைத்து நகையும், பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.