திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள், நெல்லை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மத்திய அலுவலகம் முன்பு இன்று (பிப்ரவரி 25) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் மொத்தம் 86 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்கு 2015ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகை இதுவரை வழங்கவில்லை.
அதனை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் அதற்கான தொகையை ஏழாயிரத்து 850 ரூபாய் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாதந்தோறும் 1ஆம் தேதியன்று ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவர்கள் நெல்லை - தூத்துக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது. இருந்தபோதிலும், முற்றுகைப் போராட்டம் தொடர்ந்தது.
இதையும் படிங்க: ரவுடி போலீஸ்: மாமூல் தர மறுத்த வியாபாரிக்கு வெட்டு!