திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய நிலப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பல் வரை சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. பாறைகளைச் சுற்றியும் நீராவி உற்பத்திக் கலனை கடல் அலைகள் தாக்காத வண்ணம், கடல் சீற்றத்தை தடுக்கும் வகையில் கற்கள் போடப்பட்டன.
எனவே, இன்று பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலில் உள்ள நீராவி உற்பத்திக் கலனை பெரிய ஹைட்ராலிக் கிரேன்கள் கொண்ட ட்ரெய்லர் மூலம் மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படன. இதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு முகாமிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு கலன் தற்போது மீட்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வருகிற 2027ஆம் ஆண்டுக்குள், இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து, மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த அணு உலைகளுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அணு உலைகளின் முக்கிய உதிரி பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து.
அங்கிருந்து தரை மார்க்கமாகவும் அதிக அளவுள்ள உதிரி பாகங்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகப் பகுதிகளுக்குள் உள்ள சிறிய துறைமுகத்திற்கு மிதவைக் கப்பல் மூலமாக கடல் மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து எடுத்து வரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று பெரிய உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு ரஷ்யாவில் இருந்து ஸ்டீம் ஜெனரேட்டர்கள் (Steam Generator) எனப்படும் நீராவி உற்பத்திக் கலன்கள் வந்தடைந்தன. அவை அனைத்தும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவைக் கப்பல் மூலமாக ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
310 டன் எடை கொண்ட இரண்டு ஸ்டீம் ஜெனரேட்டர்கள் எனப்படும் நீராவி உற்பத்திக் கலன் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, கடந்த 8ஆம் தேதி மாலை கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் வரும்போது இழுவை படகின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவைப் படகு பாறை இடுக்கில் சிக்கியது.
இதனால் இழுவைப் படகில் உள்ள உலோகத்திலான கயிறு துண்டிக்கப்பட்டு விட்டது. அப்போது கடல் அலையின் காரணமாக, மிதவைப் படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மிதவைப் படகு சேதத்துக்குள்ளானது.
சேதத்துக்குள்ளான படகை மீட்கும் வகையில், 15 டன் விசைத்திறன் கொண்ட அதிநவீன ஓரியன் T1202 என பெயரிட்ட இழுவைப் படகானது இலங்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வரவழைக்கப்பட்டு, பாறையில் சிக்கிய மிதவைப் படகை இழுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுகங்களிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்கூபா டைவர்கள், பாறையில் சிக்கி உள்ள மிதவைப் படகை ஆய்வு செய்தனர். அதில் மிதவைப் படகில் பல்வேறு இடங்களில் சேதாரம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. எனவே, இழுவைப் படகை வைத்து இழுக்கும் பணி உகந்ததாக இருக்காது எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இறுதியாக அணுமின் நிலைய கடற்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு பெரிய பாறாங்கற்கள் மூலம் பிரத்யேகமாக சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டு, தற்போது முடிவு பெற்றுள்ளன. மேலும், கடல் அலைகள் அதிவேகத்துடன் மிதவைப் படகின் மேல் மோதாதவாறு, பாறை சுற்றியும் கருங்கற்கள் போடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, ஹைட்ராலிக் டிரெய்லர் கிரேன்கள் மூலம் நீராவி உற்பத்திக் கலன்கள் ஏற்றப்பட்டு, கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்காக இந்திய கடற்படை தொழில்நுட்ப வல்லுநர்களும், ஸ்கூபா டைவர்களும் முகாமிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன இழுவைப் படகும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஸ்டீம் ஜெனரேட்டர்கள் முழுவதும், காப்பீடு செய்யப்பட்டுள்ளதனால் காப்பீட்டுக் கழக உயர் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கடற்கரையில் இருந்து சிக்குண்ட பாறை வரை அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில், 30 டயர்களைக் கொண்ட அதிநவீன ஹைட்ராலிக் ட்ரெய்லர் மூலம் நீராவி உற்பத்திக் கலனை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மேற்பார்வையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், 19 நாட்களுக்குப் பிறகு கூடங்குளம் அணுமின் நிலைய நீராவி உற்பத்தி கலன்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் கடலில் பாறையில் சிக்கிய நீராவி உற்பத்திக் கலன் மீட்கபட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது கலனை மீட்கும் பணியில் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் இரண்டாவது நீராவி உற்பத்திக் கலனும் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!