திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உறுமன்குளம் ஊராட்சி பெட்டைக் குளம் கிராமத்தில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் அமுதம் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையில் ரேஷன் கார்டுடன் முறைப்படி பொருள் வாங்க சென்ற பொதுமக்களிடம் கடை ஊழியர், ‘பொருள் இல்லை நாளை வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, கடையில் உள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களை கார்டு இல்லாதவர்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முறைகேடாக கார்டு இல்லாத நபருக்கு அரிசி வழங்கியதை கண்டுபிடித்ததாக கூறப்படும் நபர் ஒருவர், இது குறித்து கடை ஊழியரிடம் தட்டிக் கேட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த நபர், முறைப்படி ரேஷன் கார்டு கொண்டு பொருள் கேட்டபோது சரக்கு இல்லை நாளை வாருங்கள் என கடை ஊழியர் கூறியுள்ளார்.
ஆனால் கார்டே இல்லாத நபருக்கு கேட்ட உடன் அரிசி வழங்கியுள்ளதாக, வீடியோவில் அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முறைகேட்டை தட்டிக் கேட்டபோது வீடியோ எடுக்கிறார் என தெரிந்தும், கடை ஊழியர் மிகவும் சாதாரணமாக வாயில் வெற்றிலை பாக்கு போடுவதும், எதுவுமே நடக்காததுபோல் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி மெல்லுவதற்கு தயாரான காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக வழங்கக்கூடிய அரிசியை முறைகேடாக விற்பனை செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!