நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நிலையில், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் முனைப்போடு ரசிகர்கள் செயல்பட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் உடல் நலம் கருதி, தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை, ரசிகர்கள், பொதுமக்கள் மன்னித்துவிடுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
ரஜினி ரசிகரின் குமுறல்:
இது குறித்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர் இசக்கியப்பன் கூறியதாவது, “ரஜினியின் அரசியல் பயணத்திற்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அழுத்தம் காரணமாக மாவட்ட நிர்வாகிகள் யாரேனும் பாதிக்கப்படலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் அவர் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளார்.
இருப்பினும் இந்த அறிவிப்பை எங்களால் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் கூட தொடர்ந்து அவருக்காக, நாங்கள் மக்கள் பணியில் ஈடுபடுவோம். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவரை முழுமனதோடு தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
ரஜினி குறித்து பேசிய கமல் ரசிகர்:
ரஜினி தனது 40 ஆண்டு கால நண்பர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட மக்கள் நீதி மையம் தலைவர் செந்தில் கூறுகையில், “ரஜினிகாந்த் உடல் நலம் கருதி ஓய்வெடுக்க வேண்டும். அவரது இந்த அறிவிப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
சினிமாவில் கூட அவர் கமலுக்கு இணையாக நடித்துவந்ததை தான் நாங்கள் விரும்பி பார்த்தோம். அதேபோல் அரசியல் களத்திலும் பயணிப்பார் என்று நினைத்தோம். ரஜினி கட்சி தொடங்கி இருந்தால் எங்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் இருப்பினும் ரஜினி அவரது 40 ஆண்டுகால நண்பரான கமலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு