திருநெல்வேலி: தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் மட்டும் போதாது, தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று(பிப்.17) நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்றும், அம்மக்களை தற்போது இடம் பெற்றுள்ள பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 25 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம்.
தற்போது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதுடன், பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கையாக முன்வைத்து வருகிறோம். ஆங்கிலேயர் காலத்தில், அம்மக்களின் வறுமையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தவறாக அவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் இணைத்துள்ளனர். இதனால் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இளைஞர்கள் கல்வி மற்றும் வேலையில் வாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்பதில் எந்த மாற்றுகருத்து இல்லை.
பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால் பெரும்பான்மையான மக்களின் முன்னேற்றம் தடைபடுகிறது, அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. அம்மக்கள் திறமையானவர்களாக இருந்தாலும் கூட மலிவாக பார்க்கக் கூடிய சூழல் இருக்கின்றது. பட்டியல் பிரிவில் இருப்பதால், ஏதாவது ஒரு சில சலுகைகள் இருந்தாலும் கூட அதை பற்றி கவலை இல்லை. அந்த சலுகைகள் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை பட்டியல் பிரிவில் இருந்து தாங்கள் விடுபட வேண்டும் என்பதுதான் அந்த மக்களின் பிரதானமான கோரிக்கையாகும்.
பெயர் மாற்றத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அவர்கள் பட்டியல் பிரிவில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற திருத்தத்தையும் மசோதாவில் கொண்டு வரவேண்டும். இது தொடர்பாக ஈமெயில் மூலமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டுள்ளேன் என்றார்.
தற்போது பட்டியல் இனத்திலிருந்து இருந்து வெளியேற வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதன் பிறகே மற்றது குறித்து முடிவெடுப்போம். தனித்தொகுதிகள் இல்லாத மற்ற சமூகத்தினருக்கு வேறு எந்த தொகுதியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லையா? தனித் தொகுதியை காட்டிலும் பொதுத் தொகுதியில் போட்டியிடுபவர்களே அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே பொதுத் தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் உண்மையான அதிகாரத்தை நோக்கி பயணம் செய்வோம் என்றார்.
தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறீர்களா என்று திரும்ப திரும்ப செய்தியாளர்கள் கேட்ட போதும், கடைசி வரை அதற்கு கிருஷ்ணசாமி பதில் அளிக்கவில்லை. அதேபோல் தங்கள் மகன் கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: ’பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட திமுக’ - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!