திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் பிரபல தனியார் ஜவுளிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர் இயங்கிவருகிறது.
அங்கு, நெல்லைப் பேட்டையைச் சேர்ந்த நர்கீஸ் பானு என்ற பெண் நகை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, கைதவறி நகை ஒன்று கீழே விழுந்துள்ளது. அதற்கு நஷ்ட ஈடாக 10ஆயிரம் ரூபாய் தருமாறு ஊழியர் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஊழியருக்கும், அந்தப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்தப் பெண்ணை தரக்குறைவாக பேசி, கையைப்பிடித்து இழுத்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடை முன்பு குவிந்தனர். பின்பு, தரக்குறைவாக நடந்துகொண்ட ஊழியரைக் கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், சம்மந்தப்பட் ஊழியர் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கோரியதாலும், நஷ்ட ஈடு எதுவும் தரவேண்டாம் எனக் கூறியதாலும் இருதரப்பும் சமாதனம் ஆகினர். இந்தத் திடீர் போராட்டத்தால் தனியார் ஜவுளிக்கடை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு