திருநெல்வேலி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை கரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இன்று (ஆக.4) மாவட்ட நிர்வாகம், சித்த மருத்துவத்துறை சார்பில் பாளையங்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. பின்னர் கரோனா தடுப்பூசி போடும் முகாமினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், "தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் கரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது.
ஆக்ஸிஜன் உற்பத்தி
கரோனா 2ஆவது அலையில் ஆக்ஸிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. அதனால் 3ஆவது அலையை எதிர் கொள்ளும் வகையில் கூடன்குளம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலமும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம்வரை கிருஷ்ணா நதி நீர் திறப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறை