திருநெல்வேலி: பாபநாசம் காரையாறு அணை பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிபவர் கிறிஸ்துராஜா. காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அஞ்சல் நிலைய அலுவலராகவும், தபால்காரராகவும் ஒரே ஆளாக பணிகளை கவனித்து வருகிறார்.
காரையார் அணையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இஞ்சிக்குழி என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி குட்டியம்மாளுக்கு, தமிழ்நாடு அரசின் முதியோர் ஓய்வூதியம் வழங்கி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அண்மையில் உதவி செய்தார்.
சொந்த செலவில் சவாலான பயணம்
அதாவது, சில மாதங்களுக்கு முன்பு இஞ்சிக்குழிக்கு மலை பயணம் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அங்கு ஆதரவு இல்லாமல் தவித்து வரும் மூதாட்டி குட்டியம்மாளை சந்தித்தார்.
அப்போது, மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். அதே சமயம் வனப்பகுதி என்பதால் வங்கி, ஏடிஎம் வசதி இல்லாததை கருத்தில் கொண்டு தபால்துறை மூலம் குட்டியம்மாளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காரையாறு பாபநாசம் தபால் நிலைய ஊழியர் கிறிஸ்துராஜா மாதம்தோறும் குட்டி அம்மாவுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தனது சொந்த செலவில், படகில் அணையைக் கடந்து, பிறகு 10 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் சவாலான மலைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அஞ்சல் அலுவலருக்கு நற்சான்றிதழ்
பெரும்பாலும் இது போன்று ஒரே ஒரு மணி ஆர்டருக்காக பல கிலோமீட்டர் செல்வதற்கு தபால் ஊழியர்கள் தயங்குவார்கள். ஆனால், காட்டுப்பகுதி என்று தெரிந்தும் குட்டி அம்மாவுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக, மாதம்தோறும் கிறிஸ்துராஜா ஒரு நாள் முழுவதையும் செலவு செய்து மலை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து நமது ஈடிவி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியில் இன்று (ஆக 15) நடைபெற்ற 75வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தின் போது தபால் ஊழியர் கிறிஸ்துராஜாவின் செயலைப் பாராட்டி, அவருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நற்சான்று வழங்கி கௌரவித்தார்.
இதுகுறித்து கிறிஸ்து ராஜா கூறுகையில், “இந்த சான்றிதழ் மூலம் தபால் துறைக்கும் எனது காணி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை எங்கள் தபால் துறைக்கு இதுபோன்ற நற்சான்றிதழ் கிடைக்கவில்லை. எனக்கு சான்றிதழ் கொடுத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.
ஒரே ஒரு மணி ஆர்டருக்காக மாதம்தோறும் தனது சொந்த செலவில் 10 கிலோ மீட்டர் தூரம் மலை பயணம் மேற்கொள்ளும் தபால் ஊழியரை கௌரவித்த மாவட்ட ஆட்சியரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அடர்ந்த வனம்; மூதாட்டிக்கு 1,000 ரூபாய் கொடுக்க சொந்த செலவில் ஆபத்தான பயணம்!