தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. இதற்கிடையில் சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று (ஜூன் 30) தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் வணிகர்கள் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக இந்தப் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வணிகர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்தும், வரும் காலங்களில் இதுபோன்று வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் மனு அளிக்க சென்ற வணிகர் சங்கத்தினரிடம் காவல் துறை அலுவலர்கள், சாத்தான்குளம் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த இரண்டு பேருக்கும் இரங்கல் தெரிவித்துடன், மனு அளிக்க வந்த அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி மரியாதை செய்து அனுப்பினர்.