திருநெல்வேலி மாவட்டம் பர்கிட் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சர்புதீன் (65). இவரது பேரன் இர்பான் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இர்பானுக்கும், அவருடன் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அவர்களுக்கிடையே பர்கிட் மாநகர் பகுதியில் நேற்றிரவு (பிப். 2) மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க முகமது சர்புதீன் சென்றுள்ளார். அப்போது அந்தக் கும்பல் சர்புதீனைப் பிடித்து தள்ளியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில், அவர் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனை வந்த நெல்லை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் தகராறில் ஈடுபட்ட நான்கு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சரின் பார்வைக்காக காணொலி...!