திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம் வந்தநல்லூரை அடுத்த பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை. 53 வயதான இவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் நேற்று (டிசம்பர் 23) தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்ற வளாகத்திலேயே சுடலை விஷம் குடித்துள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வளாகத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்தார். அதன்பின்னரே அவர் விஷம் குடித்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு அவசர உறுதி மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் செல்லும் வழியிலேயே சுடலை உயிரிழந்தார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தண்டனை அறிந்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவருக்கு எங்கிருந்து விஷம் கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: மரத்தில் மோதிய ஆடி கார்.. கழண்டு விழுந்த இஞ்சின்.. ஒருவர் உயிரிழப்பு