தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தும் முடங்கியது. இதனால், தமிழ்நாடு முழுவதும், 743 மாணவர்கள் சில பாடங்களுக்குத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அம்மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 743 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 11 மாணவர்கள் இன்று(ஜூலை 27) மறுதேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் ஒன்பது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த முத்து சங்கர் கணேஷ் என்ற ஒரே ஒரு மாணவன் தேர்வு எழுதினார்.
ஒரே மாணவருக்காக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தனியார் பள்ளியிலும் தனித்தேர்வர் ஒருவர் தேர்வு எழுதினார். பெரும்பாலான மையங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே தேர்வு எழுதினர். 11 மாணவர்களில், 2 பேர் தனித்தேர்வர்கள் ஆவர். புவியியல், வேதியியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்