நெல்லை: நாள்தோறும் வீடுகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 100 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள், 70 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் என மொத்தம் 170 மெட்ரிக் டன் குப்பைகள் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மொத்தம் 45 நுண் உரம் தயாரிக்கும் கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பைகளை இயற்கை முறையில் உரமாக்கும் பைப் கம்போஸ்டிங்க் என்ற புதிய திட்டத்தினை நெல்லை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்
முதற்கட்டமாக பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட வி.எம். சத்திரம், கவிதா நகர் பகுதியில் உள்ள 150 வீடுகளில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 25) தொடங்கிவைத்தனர்.
இத்திட்டப்படி பொதுமக்களின் வீடுகளில் ஐந்து அடி உயரமுள்ள ஆங்காங்கே துளையிடப்பட்ட இரண்டு பிவிசி பைப்புகள் மண்ணில் புதைத்துவைக்கப்படும். பின்னர் பொதுமக்கள் நாள்தோறும் தங்கள் வீடுகளில் சேரும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை இந்த பைப் உள்ளே சேகரித்துவர வேண்டும் பைப்பில் குப்பைகள் நிரம்பியவுடன் தயிரை ஊற்றினால் வளமான இயற்கை உரம் கிடைக்கும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், ”நெல்லை மாநகராட்சியில் ஏற்கனவே 100 டன் மக்கும் குப்பைகளை நுண் உரம் தயாரிக்கும் கூடம் மூலம் கையாண்டுவருகிறோம். தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக பைப் கம்போஸ்டிங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி பொதுமக்கள் மிக மிகக் குறைந்த செலவில் தங்கள் வீடுகளிலேயே இயற்கை உரங்களை தயாரித்துக்கொள்ள முடியும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
முதற்கட்டமாக 150 வீடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே உள்ள நுண் உரம் தயாரிக்கும் கூடங்களில் உரம் தயாரிக்க மண்புழுக்கள் தேவைப்படும். ஆனால் பைப் கம்போஸ்டிங் முறையில் மிக எளிய முறையில் உரம் தயாரிக்க முடியும்” என்றார்.
நெல்லை சீர்மிகு நகரம் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) குறித்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் கூறும்போது, ”நெல்லை மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 திட்டங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்'