திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை அமைந்துள்ளது. இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற அண்டை மாவட்ட மக்களும் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனர். குறிப்பாக நாள்தோறும் 2000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்த நிலையில் இங்கு நோயாளிகளின் ரத்த பரிசோதனைகளை பெறுவதிலும் அதன் முடிவுகளை வழங்குவதிலும் மிக தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பசி பட்டினியோடு விடிய விடிய காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பரிசோதனை முடிவு வழங்கும் நடைமுறை முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது, அதன்படி நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகள் அந்தந்த வார்டுகளுக்கே அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே ரத்தம் வழங்க மட்டும் பரிசோதனை மையத்துக்குச் சென்றால் போதும் என்ற நிலை உள்ள நிலையில் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக தற்போது நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதில் மீண்டும் தாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கையில் ரத்தத்துடன் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மணிக் கணக்கில் ரத்த பரிசோதனை மையத்தில் வரிசையில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பரிசோதனை செய்யப்பட வேண்டும், ஆனால் பரிசோதனை மையத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ரத்தம் உறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இன்று நெல்லை மாநகரில் வெயில் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடும் வெயிலிலும் நோயாளிகள் ரத்த மாதிரியுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதேபோல் வயதான முதியவர்களும் பசி மயக்கத்துடன் வரிசையில் நின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூறும்போது, “பிரின்ட் பேப்பர் காலியாகிவிட்டதால் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், கவுன்டரில் ஊழியர்கள் சரிவர வேலை செய்யாமல் அலட்சியமுடன் உள்ளனர். கூடுதல் ஊழியர்களை நியமித்து உடனுக்குடன் ரத்த மாதிரிகளை வாங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டபோது, “நாள்தோறும் உள்நோயாளிகள் 2500 பேர் புற நோயாளிகள் 2500 பேர் என 5000 பேர் வருகின்றனர். இதில் 2000 ரத்த மாதிரிகள் சராசரியாக வருகிறது. எனவே தான் சில நாள்களில் மட்டும் கவுன்டரில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பரிசோதனை முடிவுகள் பொறுத்தவரை நவீனமயமாக்கப்பட்டு அந்தந்த வார்டுகளில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம் எனவே ரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதமும் விரைவில் சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப கோளறா? - மா சுப்பிரமணியன் கேள்வி