திருநெல்வேலி: வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசிப்பவர் தங்கராசு (65). தன்னுடைய 17 வயதில் தெரு கூத்து கலைஞராக வாழ்க்கையை தொடங்கி 40 ஆண்டுகளாக கலைப்பணியில் உள்ளார். குறிப்பாக, தொழிலில் இல்லாத காலங்களில் பாளையங்கோட்டை சந்தையில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இதனிடையே இவருக்கு பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும்படி இருந்தது. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக, 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலில்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். குறிப்பாக, அவரது வீடு மழையில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உடனடியாக அலுவலர்களை அழைத்து, தங்கராசு வீட்டை சீரமைக்க உத்தரவிட்டார். ஆனால், வீடு முற்றிலும் சேதமடைந்ததால், அதே இடத்தில் புதிய வீட்டை கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. அந்த வகையில், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் வீடு கட்டி முடிக்கப்பட்டது.
நேற்று (ஏப். 14) மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் வீட்டை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்