திருநெல்வேலி வாகைக் குளத்தைச் சேர்ந்தவர், முத்து மனோ. இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைக்குள் ஏற்பட்டத் தகராறில் முத்து மனோ, சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார்.
சாதி மோதல் காரணமாக சிறை அலுவலர்களின் உதவியோடு அவர் கொலை செய்யப்பட்டதாக, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து ஐம்பது நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜெயிலர், துணை ஜெயிலர்கள், சிறைக் காவலர்கள் உட்பட ஏழு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த கைதியின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருச்சி மத்திய சிறையில் பணியாற்றிவரும் கண்காணிப்பாளர் சங்கர், பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் பாளையங்கோட்டை சிறை ஜெயிலர் பரசுராமன் மதுரைக்கும், மதுரை சிறையில் பணியாற்றிவரும் ஜெயிலர் வசந்த கண்ணன் பாளையங்கோட்டை சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டிஐஜி பழனி பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கியுடன் வீதியுலா - பொதுமக்கள் பீதி