திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவரை வழக்கு ஒன்றில் கைதுசெய்த காவல் துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கச் சென்றனர்.
அப்போது அவர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். சிறை அலுவலர்களின் உதவியோடுதான் கைதி முத்துமனோ கொலைசெய்யப்பட்டதாக, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறைத் துறை டிஐஜி பழனி, பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாக ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இருப்பினும் சிறை பொறுப்பு அலுவலர் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; உயிரிழந்த முத்து மனோவின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உயிரிழந்த கைதியின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து 44ஆவது நாளாக அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
உயிரிழந்த கைதியின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வழக்கில் மேலும் ஓர் திருப்பமாக பாளையங்கோட்டை மத்திய சிறை ஜெயிலர் சண்முகசுந்தரத்தைப் பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கானது ஏற்கனவே சிபிசிஐடி வசம் உள்ள நிலையில், மேலும் ஒருவர் பணி நீக்கம்செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜாதி மோதல் காரணமாகத்தான் சிறைக்குள் கைதி முத்து மனோ கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மீது கொலை, கொள்ளை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மின்னஞ்சலை ஹேக் செய்ய திட்டமிடுகிறார் - காவல் நிலையத்தை நாடும் நடிகை!