திருநெல்வேலி: நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
அரசு மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இங்கு, ஆக்ஸிஜன் வசதியுடன் 800 படுக்கைகள் உள்ள நிலையில், மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 900 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உள்ளதாக உள்ளன. இவை அனைத்தும் நிரம்பி உள்ளன.
தற்போது, மருத்துவமனையில் இடம் இல்லாததால் புதிதாக நோய் பாதிக்கப்பட்டு வருபவர்கள் பல மணிநேர காத்திருப்பிற்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். 900 பேருக்கு மேல் சிகிச்சையில் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆக்சிஜன் கட்டாயம் தேவை என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜனை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆக்சிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு சராசரியாக மூன்று முதல் எட்டு ஆயிரம் கிலோ லிட்டர் அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் ஆக்சிஜன் செல்லும் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் இதனை சமாளிக்கும் வகையில் அரசின் ஏற்பாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் இருந்து ஐந்து ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நெல்லை மருத்துவமனை சேமிப்புக் கிடங்கில் இன்று(மே.11) சேமிக்கப்பட்டது. இந்த ஆக்சிஜன் ஒரு சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும் நிலைக்கு வருவதால் தொடர்ந்து நெல்லை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோவிட் பாதிப்பு குறைவதற்கான அறிகுறி தென்படுகிறது!