விளைச்சல் குறைவு, வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது.
குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் அதிகபட்சம் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாள்களாக 100 முதல் 120 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை டவுனில் உள்ள நாயனார் காய்கறிச் சந்தையில் உள்ள வியாபாரி ஒருவர் வடமாநில வியாபாரிகள் மூலம் ஈரான் நாட்டிலிருந்து 20 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தார். இந்த வெங்காயம் கப்பல் மூலமாக மும்பை துறைமுகம் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரி மூலம் இன்று நெல்லை நயினார் காய்கறிச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்திய வெங்காயத்தைவிட முற்றிலும் மாறுபட்டு காணப்படும் ஈரான் வெங்காயம் அடர் சிவப்பு நிறத்தில் அதிக தடிமனுடன் காணப்பட்டது. வெங்காயத்தை குடோனில் இறக்கிவைத்து நாளைமுதல் (அக். 25) விற்பனை செய்ய உள்ளனர்.
இது குறித்து நெல்லை காய்கறிச் சந்தை வியாபாரி உடையார் கூறுகையில், "வட மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் நாட்டிலிருந்து 20 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளோம்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் குறைந்த விலையில் வெங்காயம் வழங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
ஈரான் நாட்டு வெங்காயத்தின் வருகை மூலம் நெல்லையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 30 ரூபாய் வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து கூடுதலாக வெங்காயம் இறக்குமதி செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக தொண்டரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை!