திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகே அலங்கார் மொபைல் என்ற பெயரில் நேற்று புதிய செல்போன் கடை ஒன்று திறக்கப்பட்டது.
புதிதாக கடை திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த செல்போன் கடையில் வெறும் 6 ரூபாய்க்கு ஹெட்செட் வழங்குவதாக தெரிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்டு நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அலங்கார் செல்போன் கடையில் குவிந்துள்ளனர். மலிவு விலையில் ஹெட்செட் கிடைப்பதால் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் சென்றுள்ளது.
இது குறித்து தகவலறிந்த நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் ஊரடங்கு காலத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டிய காரணத்திற்காக மாநகராட்சி அலுவலர்கள் இன்று அலங்கார் செல்போன் கடையை இழுத்து மூடினர்.
மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்றாதது ஊழியர்கள் முகக்கவசம் அணியாதது, போதிய பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களுக்காக செல்போன் கடை இன்று முதல் வரும் செப்.1ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கடையில் கதவில் மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
இதற்கிடையில் இந்த செல்போன் கடையின் ஆஃபரை தெரிந்து கொண்டு இன்றும் பலர் கடை முன்பு வந்தனர் ஆனால் கடை மூடப்பட்டு இருப்பதை கண்டு பொதுமக்கள் ஏமாந்து சென்றனர்.