சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவின் விளம்பரப் பலகை விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைக் கலைஞர்களும் தங்களுக்காக விளம்பரப் பலகைகள் வைப்பதை நிறுத்த தொண்டர்களிடமும் ரசிகர்களிடமும் அறிவுரை வழங்கிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, நடிகர்கள் விஜய்,ம் சூர்யா இருவரும் தனது திரைப்படங்களுக்கு பேனர் வைப்பதைத் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு பதிலாக குழந்தைகளின் கல்விச் செலவிற்கு உதவி செய்யுமாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இனி வெளிவரும் திரைப்படஙகளுக்கு விளம்பரப் பலகை வைப்பதில்லை என அஜித் ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் ரசிகர்களுக்கான ஆலோசனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், புதிய திரைப்படம் வெளியாகும்போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் உயிரைக்க காக்கும் தரமான தலைக்கவசம் வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும் எனப் பதிவிட்டிருந்தார்.
இவரது இந்தப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, திரைக்கு வரவுள்ள நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு இருநூறு தலைக்கவசங்கள் வழங்கப்படும் என நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தகவலளித்துள்ளனர். ரசிகர்களின் அறிவிப்பிற்கு சமூக வலைதளங்களில் பலதரப்பிலிருந்தும் வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இவர் இதற்குமுன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைத்து காட்சிகளிலும் தலைக்கவசம் பயன்படுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.