திருநெல்வேலி நேதாஜி மார்க்கெட்டில் சுமார் 300 கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 180 கடைகள் நிரந்தரக் கடைகளாகவும், 120 கடைகள் நடைபாதை கடைகளாகவும் இருந்தது. இந்நிலையில் அங்கு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு, நவீன முறையில் வணிக வளாகம் கட்டத் திட்டமிடப்பட்டு கடைகளை, காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளனர். இதனிடையே ஊரடங்கு காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் நேதாஜி மார்க்கெட்டை மூடி விட்டு, அங்குள்ள கடைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாநகராட்சி பொருட்காட்சி மைதானத்திலும், கண்டியபெரி உழவர் சந்தையிலும் தற்காலிக கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நெல்லை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பொருட்காட்சி மைதானத்தில் தண்ணீர் தேங்கியதுடன் கடைகளும் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர்.
மனு அளித்த சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலர்கள் பொருட்காட்சி மைதானத்திற்குச் சென்று, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்பட இருப்பதால், 24 மணி நேரத்தில் கடையைக் காலி செய்ய வேண்டும் என கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
இதனை வாங்க மறுத்த வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அலுவலர்கள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் வியாபாரிகள் அங்கு இருந்து கடைகளை மாற்றுவது என்பது 24 மணி நேரத்தில் முடியாது எனவும்; கூடுதல் காலஅவகாசம் வேண்டும் எனவும்; மேலும் கடைகள் அமைக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளுடன் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் அதுவரை இங்கிருந்து கடைகளை காலி செய்ய முடியாது எனவும் தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்தான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் - அதிமுக ஐடி பிரிவு