நெல்லை: தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா (Karunanidhi Centenary Birthday) கொண்டாட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (நவ.5) கொண்டாடப்பட்டது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் கயல்விழி செல்வராஜ் மற்றும் சபாநாயகர் அப்பா நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றினர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பரிசு பெறும் மாணவர்களைத் தவிரப் பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் எனப் பெரிதளவில் யாரும் பங்கேற்கவில்லை. குறிப்பாக, அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பேசும் போது நிகழ்ச்சி அரங்கில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக காட்சியளித்தன.
வழக்கமாக, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பங்கேற்கும்போது ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு நிகழ்ச்சி அரங்கினை அலங்கரிப்பர். ஆனால் இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியினரும் பெரிய அளவில் பங்கேற்காததால் நிகழ்ச்சி அரங்கு காலியாகவே காட்சி அளித்தது பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர் அவர்களும் பெரிய அளவில் அமைச்சர்களின் பேச்சைக் கவனிக்கவில்லை இதனால் நிகழ்ச்சி வேடிக்கையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் செய்தியாளர்களை தாக்க முயன்ற பாஜகவினர்... நடந்தது என்ன?