திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் மேயர் சரவணன் மீது திமுக கவுன்சிலர்கள் 44 பேர் அதிரடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் காலை 11 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வருகை தந்தார். இந்நிலையில் அரை மணி நேரம் அவர் காத்திருந்தும் கூட்டத்துக்கு அதிமுக கவுன்சிலர்கள் உட்பட ஒரு கவுன்சிலர்களும் வரவில்லை எனவே கூட்டம் கைவிடப்பட்டதாக ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடும் என்பதால் திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் நேற்றே இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது. அதன்படி நேற்று நெல்லை தனியார் ஹோட்டலில் இருந்த திமுக கவுன்சிலர்கள் காரில் வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் வெளியூருக்கு சென்ற கவுன்சிலர்களில் சுமார் 30 பேர் இன்று மீண்டும் நெல்லை திரும்பிய நிலையில் வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து மேயர் சரவணனும் திமுக அலுவலகத்திற்கு சென்றார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் மைதீன் கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா உட்பட முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பின்னர் தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மேயர் சரவணன் தனது வழக்கமான பணிகளை தொடர அங்கிருந்து நேராக மாநகராட்சி அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றார். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தளபதி வாழ்க வாழ்க என கோஷம் எழுப்பினர். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மேயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேயர் சரவணன் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து மௌனமாக சென்று விட்டார்.
இதையும் படிங்க: பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு