தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்துறை அலுவலர்கள் சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டனர். அந்தவகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 15) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முன்னதாக நான் திருநெல்வேலியில் பணி புரிந்துள்ளேன். வரும் காலங்களில் திருநெல்வேலியில் சட்டம் ஒழுங்கை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் சிறிய விசயங்களையும் எனது நேரடி கவனத்திற்கு கொண்டு வந்து சரி செய்ய முயற்சிப்பேன். கரோனா தொடர்பாக இதுவரை மாவட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசித்து விட்டு, மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே எனக் கேட்டபோது, ”பொதுவாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அதிகபட்சம் ஐந்து நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நேரில் வராமல் நான் வழங்கும் தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். அதன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாட்ஸ்அப் புகார்கள் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையில் தனி குழு ஏற்படுத்தப்படும்” என பதிலளித்தார்.
நெல்லையில் சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ மதுரையில் சைபர் கிளப் உருவாக்கி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளேன். இங்கு காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்த பிறகு அதே போல் சைபர் கிளப் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்பு!