திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் காவலராக நெல்லை சரக டிஐஜி முகாம் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. முத்துக்குமார் மனைவி ஜெயசூர்யா மற்றும் தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், முத்துக்குமார் நேற்று கேரள மாநில தேர்தல் சிறப்புப் பணிக்காக சென்றுவிட்டார். முத்துக்குமார் மனைவி ஜெயசூர்யா படுக்கை அறையில் இருந்து வெகுநேரமாகியும் வெளிய வரவில்லை. முத்துக்குமாரின் பெற்றோர் அறையை திறந்து பார்த்தபோது அங்கு சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜெயசூர்யா பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.