திருநெல்வேலி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள், கடந்த 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால், இந்த ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் அதன்பின் செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் அறிவித்தது. இதனால் பலரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். அந்த ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்வதற்கு, ரிசர்வ் வங்கி 4 மாதங்கள் கால அவகாசம் கொடுத்தது.
அந்த காலம் இன்னும் மூன்று நாட்களில் முடிவடைகிறது. அதில் ஒருநாள் அரசு விடுமுறையாக உள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கோயில் உண்டியல்களில் வரும் காணிக்கை பணம் உள்ளிட்டவைகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் 21 நிரந்தர உண்டியல்கள் கடந்த 15ஆம் தேதி திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரொக்க பணம் 16 லட்சத்து 13 ஆயிரத்து 772 ரூபாயும், தங்கம் 72 கிராமும், வெள்ளி 287 கிராமும் வெளிநாட்டு பணம் 33 நோட்டுகளும் இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (செப். 26) மீண்டும் 21 நிரந்தர உண்டியல்கள் மற்றும் சுற்றுக் கோயில்களின் உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 982 ரூபாயும், சுற்று கோயில்களில் உள்ள 6 உண்டியல்களில் 1 லட்சத்து 765 ரூபாயும், கிடைக்கப் பெற்றதாகவும் கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் உடைந்து விழுந்த பிரம்மதேவன் சிலை!