திருநெல்வேலி: திருநெல்வேலியில் பள்ளி மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக கூறி ஏமாற்றியதோடு, அவரிடமிருந்த 13 பவுன் நகைகளை அபரிகத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இளைஞரிடம் இருந்து அந்நகைகளைப் பெற்று விற்றுவிட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, இன்ஸ்டாகிராமில் ஜெயசீலன் (21) என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், இப்பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய இந்த இளைஞர், மாணவியிடமிருந்து பணம் மற்றும் 13 தங்க நகைகளைப் பெற்றுள்ளார். மாணவியிடம் இருந்து பெற்ற நகைகளை, அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வர்கலை என்பவரிடம் விற்பதற்காக கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, பள்ளி மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் நகைகள் குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு காதலன் ஜெயசீலனிடம் கொடுத்துவிட்டதாக மாணவி பெற்றோரிடம் பதிலளித்துள்ளார். பின்னர், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நடந்தவை குறித்து டிஎஸ்பியிடம் புகாரளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, தனிப்படை போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் தலைமறைவாக இருந்த ஜெயசீலன் பிரவீனை கைது செய்தனர். தொடர்ந்து, ஜெயசீலனிடம் இருந்த நகைகளை வாங்கி விற்க முயற்சி செய்ததாக ஈஸ்வர் கலையையும் கைது செய்ததோடு, அவரிடமிருந்த 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து SFI மாணவர்கள் போராட்டம்!