திருநெல்வேலி: தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான வந்தே பாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. அதிநவீன வசதிகள் மற்றும் குறுகிய நேர பயணம் என்பதால் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில் ஏற்கனவே தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை - மைசூர் இடையே இயக்கப்பட்டது.
பயண நேரம், தேதி: இந்நிலையில், மூன்றாவது ரயிலாக சென்னை - நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சேவை நாளை (செப் 23) முதல் தொடங்க உள்ளது. வழக்கமாக நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர மீதமுள்ள ஆறு நாட்களில் நாள்தோறும் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும் மறு மார்க்கமாக சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு கிளம்பி நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் வகையிலும் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
துவக்க விழா: பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை (செப். 24) வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். முதல் நாள் துவக்க விழா இருப்பதால் நாளை (செப். 24) மட்டும் நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் பிற்பகல் 12:30 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்பட உள்ளது.
நெல்லை மட்டும் இல்லாமல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி கண்காட்சி மூலம் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நாளை நடைபெறும் துவக்க விழாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே நாளை (செப். 24) மட்டும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 12:30 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மறுமார்க்கமாக சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படாது. மீண்டும் வரும் புதன்கிழமையில் (செப் 25) இருந்து திட்டமிட்டபடி இந்த ரயில் வாரத்தில் ஏற்கனவே தயார் செய்த நேர அட்டவணைப்படி ஆறு நாட்கள் இயக்கப்படும்.
120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் நெல்லையில் இருந்து 7 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்னையை வந்தே பாரத் ரயில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை - சென்னை இடையான வந்தே பாரத் சேவைக்கான முன்பதிவு இன்று (செப் 23) காலை துவங்கி உள்ளது.
கட்டணங்களை பொறுத்தவரை சாதாரண ஏசி சேர் கார் இருக்கை மற்றும் எக்ஸிகியூட்டிவ் கேர் சர் என இரண்டு பெட்டிகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் சாதாரண ஏசி இருக்கைக்கு உணவு கட்டணம் முன்பதிவு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ஆயிரத்து 610 ரூபாய் எனவும் எக்ஸகியூட்டிவ் கேர் சர் பெட்டியில் பயணம் செய்வதற்கு உணவு கட்டணம் ஜிஎஸ்டி, முன்பதிவு கட்டணம் என எல்லாம் சேர்த்து 3 ஆயிரத்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
கட்டண விவரம்:
வகுப்பு | அடிப்படை கட்டணம் | முன்பதிவு கட்டணம் | சூப்பர் பாஸ்ட் கட்டணம் | ஜிஎஸ்டி | உணவு கட்டணம் | மொத்த கட்டணம் |
சாதாரண ஏசி இருக்கை | 1155 | 40 | 45 | 62 | 308 | 1610/- |
எக்ஸிகியூட்டிவ் இருக்கை | 2375 | 60 | 75 | 126 | 369 | 3005/- |
ஏன் இவ்வளவு விலை? : வந்தே பாரத் ரயில் நேரமிச்சம் அதிநவீன வசதி போன்ற சிறப்புகளால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும் அதன் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே டிக்கெட் கட்டணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெல்லை டூ சென்னை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் குறைந்தபட்சம் 1,610 ரூபாயும், அதிகபட்ச 3 ஆயிரத்து 5 ரூபாய் என்றும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அடிப்படை கட்டணம் பொறுத்தவரை ஏசி சாதாரண இருக்கைக்கு 1,155 ரூபாயும், எக்ஸிகியூடிவ் கேர் சார் இருக்கைக்கு 2,375 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜிஎஸ்டி உணவு பரிமாறும் சேவை, சூப்பர் பாஸ்ட் கட்டணம், முன்பதிவு கட்டணம் ஆகியவை தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு இறுதியாக 1,610 மற்றும் 3 ஆயிரத்து 5 என இரண்டு கட்டணங்களாக பொது மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், மறுமார்க்கமாக நெல்லை - சென்னை வரும் வந்தே பாரத் ரயிலில் சாதாரண ஏசி இருக்கையில், 1665 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் இருக்கையில் 3,055 ரூபாயும் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விலை உயர்வுக்கு உணவின் விலைதான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்குமா..? கடம்பூர் ராஜூ கோரிக்கை!